இராஜகிரிய பகுதியில் உள்ள வாகன பழுதுபார்க்கும் இடமொன்றில் இளைஞர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நடிகையும், மொடல் அழகியுமான பியுமி ஹன்சமாலியின் மகன் உட்பட 7 சந்தேக நபர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.
இராஜகிரிய பகுதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் இடமொன்றில் இளைஞர் ஒருவரை மற்றுமொரு இளைஞர் தாக்கும் காணொளி அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், தாக்குதலின் போது அங்கு சமூகமளித்திருந்த இளைஞர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 முதல் 22 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த தாக்குதல் சம்பவத்தில் நடிகையும் மொடல் அழகியுமான பியுமி ஹன்சமாலியின் மகனும் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

