நெல்லை மாவட்டம் கூடங்குளம் கிராமத்தில் நீண்ட நாட்களாக குடிநீர் பற்றாக்குறை பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.இதற்கு நிரந்தர தீர்வு காண வள்ளியூர் வட்டார பகுதியில் செயல்படுத்தப்படும் ரூ.605 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்தில் கூடங்குளம் கிராமத்தை இணைத்திட முதலில் உத்தரவிடப்பட்ட நிலையில் திடீரென கூடங்குளம் ஊராட்சியை இணைப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கூடங்குளம் பஞ்சாயத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனை மாற்றி, புதிய குடிநீர் திட்டத்தில் கூடங்குளம் கிராமத்தையும் இணைக்க வேண்டும் எனக்கோரி கிராம மக்கள் கூட்டம் போட்டு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக தமிழக அரசை கண்டித்து கூடங்குளம் கிராமத்தில் உள்ள வீடுகளில் மக்கள் இன்று கருப்பு கொடி கட்டினர்.
கூடங்குளம் பஜார் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கூடங்குளம் ஊராட்சிக்கு சுனாமி மற்றும் கே.கே.என்.பி.பி. குடிநீர் திட்டங்களின் மூலம் வழங்கப்பட வேண்டிய 8 லட்சம் லிட்டர் குடிநீர் முழுமையாக வழங்கப்படவில்லை.
தற்போது புதிய குடிநீர் திட்டத்திலும் எங்களை சேர்க்கவில்லை.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தையும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையும் கண்டிக்கிறோம் என தெரிவித்தனர்.

