திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியில் புதன்கிழமை (பிப்.11) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் திருமணமாகி 6 மாதமே ஆன மாடுபிடி வீரர் பாலகுரு மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 33 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டியில் உள்ள புனித சந்தியாகப்பர், செபஸ்தியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (பிப்.11) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் 400 பேர் பங்கேற்றனர். போட்டியை திண்டுக்கல் கோட்டாட்சியர் திருமலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வாடிவாசலில் இருந்த சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், குத்து விளக்கு, குக்கர், ஃபேன், சைக்கிள், தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியில் மாடுகள் முட்டியதில் வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என 33 பேர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டில் சோகம்:
மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதில் மாடுபிடி வீரர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனை சமாமளிக்க முடியாமல் போலீஸார் தடியடி நடத்தினர்.
மேலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த பாலகுரு (24) என்பவரை காளை ஒன்று கழுத்தில் முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்த மருத்துவ குழுவினர் மீட்டு, மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாலகுரு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

