பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவு : சட்டமாக்கப்படின் ஒட்டுமொத்த நாடும் திறந்தவெளி சிறைக்குள் சிக்கிவிடும்

7 0

வட, கிழக்கில் நிலவும் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, தெற்கில் உருவாகிவரும் அரசியல், பொருளாதார மற்றும் சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்கள் சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்கு அரசாங்கத்துக்கு வழி தெரியவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டுவரப்படும் பட்சத்தில், இளைஞர்கள், மாற்றுக்கருத்துடையவர்கள், அரசியல் ஆர்வலர்கள் என யாருக்குமே எதிர்காலம் இல்லாமல் போய்விடும். அதன்பின்னர் நாட்டுமக்கள் அனைவரும் ஒரு திறந்தவெளி சிறைக்குள்ளேயே வாழவேண்டியிருக்கும் என சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் எனவும், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வாபஸ் பெறவேண்டும் எனவும் வலியுறுத்தி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் இணைந்து நாடளாவிய ரீதியில் பல்வேறு கலந்துரையாடல்கள், விழிப்புணர்வூட்டல் கூட்டங்கள், எதிர்ப்புப்போராட்டங்களை நடாத்திவருகின்றனர்.

அந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஓரங்கமாக சிவில் சமூக அமைப்புக்கள் சில இணைந்து கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சுக்கு முன்பாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (30) தொடர் கவனயீர்ப்புப்போராட்ட பிரசாரமொன்றை ஆரம்பித்திருந்தன.

அப்போராட்டம் தொடர்ந்து இரண்டாவது வாரமாக நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் பி.ப 2.00 – 4.00 மணிவரை நீதியமைச்சுக்கு முன்பாக நடைபெற்றது.

அதன்படி இப்போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம். குறித்து அவற்றை ஒருங்கிணைத்துவரும் சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் மேலும் கூறியதாவது,

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஊடாக வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகளாக்கப்பட்டதைத் தவிர, இதனூடாக தமிழ்மக்களின் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது மக்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் அல்ல. மாறாக அது அரசைப் பாதுகாப்பதற்கான சட்டம் மாத்திரமேயாகும். அதிலும் குறிப்பாக இது தேசிய மக்கள் சக்தியைப் பாதுகாப்பதற்கான சட்டமாகவே இருக்கிறது.

ஏனெனில் வட, கிழக்கில் நிலவும் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, தெற்கில் உருவாகிவரும் அரசியல், பொருளாதார மற்றும் சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்கள் சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்கு அரசாங்கத்துக்கு வழி தெரியவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் புதிதாககக் கொண்டுவரப்படும் இச்சட்டத்தின் ஊடாக மதவழிபாட்டுத்தலங்கள், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், தற்போது நான் கூறுவதைப்போன்று வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் என சகல விடயங்களும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவையாக மாற்றப்படும்.

எனவே இவ்வரைவு சட்டமாக்கப்படும் பட்சத்தில் அதன்விளைவாக இளைஞர்கள், மாற்றுக்கருத்துடையவர்கள், அரசியல் ஆர்வலர்கள் என யாருக்குமே எதிர்காலம் இல்லாமல் போய்விடும்.

அதன்பின்னர் நாட்டுமக்கள் அனைவரும் ஒரு திறந்தவெளி சிறைக்குள்ளேயே வாழவேண்டியிருக்கும். எனவே எமது நாட்டின் ஜனநாயகம் சிதைவடைந்துபோவதைத் தடுப்பதற்கு நாம் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றார்.