“ஓபிஎஸ் தனித்து விடப்படவில்லை… எங்களுடன் தான் இருக்கிறார்!” – அண்ணாமலை

24 0

 “ஓபிஎஸ் தனித்து விடப்படவில்லை. எங்களுடன்தான் இருக்கிறார்” என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் இன்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கமல்ஹாசன் நல்ல நடிகர். தமிழ் குறித்து மற்றொருவர் சொன்னதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு பேசினார். அதை கமல்ஹாசன் தவறாக புரிந்துகொண்டு பேசியது எங்களுக்கு வருத்தம்.

தற்போது அதுகுறித்து கமல்ஹாசன் கவனத்துக்கு சென்றுள்ளது. அவர் தன்னை திருத்திக்கொண்டு, தான் தவறான புரிதலோடு நிதியமைச்சரை பேசி விட்டேன் என்று கூறுவார் என்று நம்புகிறோம். மற்றபடி அவரும் தமிழகத்துக்காக உழைக்க விரும்புகிறார்.

தவெக போன்ற புதிதாக உருவாகும் கட்சிகளுக்கு எப்போதுமே எங்களது ஆக்கம், ஊக்கம் இருக்கும். தவெக அரசியல் நாகரிகத்தை கடக்கக் கூடாது என்றுதான் சொன்னேன். மற்றபடி, அவர்களது கட்சி கொள்கையை சொல்லட்டும்; தேசிய ஜனநாயக கூட்டணியும் கொள்கையை மக்கள் மத்தியில் வைக்கும். மக்கள் முடிவு செய்யட்டும்.

ஓபிஎஸ் தனித்து விடப்படவில்லை. எங்களுடன்தான் இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன.

கல்விக் கூடங்களில் கஞ்சா விற்கப்படுகிறது. எப்படி கல்வியில் சிறந்த மாநிலம் என்று தமிழகத்தை சொல்ல முடியும்? கல்விக் கூடங்களில் கஞ்சா விற்கும் நிலைமையை திமுக ஆட்சி கொண்டு வந்துள்ளது. தென்னிந்தியாவிலேயே கல்வி கற்றலில் கடைசி இடத்தில் தமிழகம் உள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட பட்டியலில் தமிழகம் அதலபாதாளத்தில் உள்ளது.

பாஜகவில் இருந்து நான் வெளியேற வாய்ப்பில்லை. மதுக்கடையை மூடுவோம் என பேசிய கனிமொழி , ஆட்சிக்கு வந்ததும் மாற்றி பேசுகிறார். வேலைப்பளு அதிகமானதால் அவர் மாற்றி, மாற்றி பேசுகிறார். நல்ல மனநல மருத்துவரை சந்திக்க வேண்டும்.

மூன்று தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. உறுதியாக நம் நாட்டில் உள்ள நதிகள் இணைக்கப்படும் என நம்புகிறோம். இதன்மூலம் நதி நீர் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்துக்கு அதிக நன்மை கிடைக்கும்” என்று அவர் கூறினார்.