டெல்லியில் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த உச்சி மாநாட்டுக்கு வருவதை ஐ.நா. சபை தலைவர் அன்டோனியா குட்டேரஸும் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு நேற்று அவர் அளித்த பேட்டி: செயற்கை நுண்ணறிவுத்துறை என்பது மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் பல நன்மைகளும், தீமைகளும் உண்டு. சர்வதேச உறவுகளில் இன்று செயற்கை நுண்ணறிவு முக்கியமான விஷயமாகவும், பிரச்சினையாகவும், எதிர்கால சவால்களில் ஒன்றாகவும் உள்ளது.
இந்தத் துறையால் பல நிபுணர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக கருதுகின்றனர். எனவே, இதுதொடர்பாக அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் உலக நாடுகள் ஒன்றிணைந்து அதைப் பற்றி விவாதிப்பது மிகவும் முக்கியம்.
இந்த உச்சிமாநாட்டில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதற்காக இந்தியாவை நான் பாராட்டுகிறேன். இந்த உச்சி மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக எழுந்துள்ள சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

