எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.85.80 லட்சம் செலவில் நிறுவப்பட்ட கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுகூடுங்கள்’ என்ற பிரகடனத்தை உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான ஒரே முழக்கமாக, பொதுவுடைமைத் தத்துவத்தை வடித்துத் தந்த மாமேதை கார்ல் மார்க்ஸ் உருவச் சிலை சென்னையில் அமைக்கப்படும்’ என்று கடந்த 2025-ம் ஆண்டு சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகம், கன்னிமாரா பொது நூலக வாயிலில் ரூ.85.80 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சிலையின் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் முதல்வர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு. சிவந்தது சென்னை! ‘இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர ஒன்றுமில்லை. அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது’ என்று உலகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிய பொதுவுடைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் சிலை கன்னிமாரா பொது நூலக வளாகத்தில் நிலைகொண்டது.
நல்லவை எங்கிருந்து வந்தாலும் வணங்கி ஏற்றுக் கொள்வோம். அல்லவை ஆதிக்கம் செலுத்தப் பார்த்தால் தடுத்து நிறுத்துவோம். இதுதான் திராவிட மாடல்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

