“தமிழனாக நான் நல்ல கருத்தை பேசியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அதை மறுப்பவர்கள், விவாதிக்க வேண்டும்” என நாடாளுமன்றத்தில் தனது முதல் பேச்சு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நல்ல கருத்து விவாதத்துக்கு உள்ளாக வேண்டும். தமிழனாக நான் நல்ல கருத்தை பேசியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அதை மறுப்பவர்கள், விவாதிக்க வேண்டும். விவாதித்து உண்மை என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும்.ஒட்டுமொத்த இந்தியா உடன்தான் எனது கூட்டணி. இந்தியாவே எனது நலன், உங்களது நலனும் கூட. கூட்டணியெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது, கொள்கையே முக்கியம். அதை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “மாநிலங்களவையில் கமல்ஹாசன் என்னென்னமோ பேசினார். கமல் பேச்சு எனக்கு புரியவே இல்லை. அவர் பேச்சு புரிந்தால் எனக்கு சொல்லுங்கள்.
ஏற்கெனவே கோவையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்டபோது அவர் பேச்சு புரியாததால்தான் மக்கள் அவரைத் தோற்கடித்து இங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் எதற்காக நிறுத்தப்பட்டாரோ அந்த முதலாளிகள் அவரை இப்போது டெல்லிக்கு அனுப்பி இருக்கின்றனர். அவர்களுக்காவது கமல் நியாயம் செய்யக் கூடாதா?” என்றார் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ.
கமல்ஹாசன் பேசியது என்ன?
தமிழ் மொழி குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், மாநிலங்களவையில் கமல்ஹாசன் எம்.பி பேசும்போதும். “இன்று தமிழை, தமிழரைப் பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ்… பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது” என்றார்.
மேலும், “தங்கச்சி… ஓட்டையும் நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர்.
உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது ‘உம் வினை உம்மை சுடுக’. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. ‘வந்தீர் வென்றீர் செல்வீர்’ இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன். தமிழ் என்றும் வாழும் நலமுடன்” என்று கமல்ஹாசன் எம்.பி. பேசியது குறிப்பிடத்தக்கது.

