“தேமுதிகவுக்கு பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை…!

12 0

 “யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. யார் மதிப்பு கொடுப்பார்களோ, அந்த இடத்தில் தேமுதிக இருக்கும்” என அக்கட்சியின் பொதுசெயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேயிலி நடைபெற்ற தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களை சாடினார். பழுத்தமரம்தான் கல்லடி படும் என்று தெரிவித்த அவர், உங்கள் செய்திகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பேசினார்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதி தேமுதிக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் அவர் பேசும்போது, “ஆளுங்கட்சி, ஆண்ட கட்சி, மத்தியில் ஆளும் கட்சி எதுவுமே கூட்டணி குறித்து இறுதியாக அறிவிக்காத நிலையில், நாங்கள் மட்டும் கூட்டணியை குறித்து தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏன்? யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. 2 பக்கமும் பேசுவதாக கூறுவது தவறு. அனுமானங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை.

உங்கள் டிஆர்பி-யை உயர்த்துவதற்காக தவறான செய்திகளை சொல்ல வேண்டாம். தேமுதிக எனது குடும்பம். அதிலுள்ள என் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது கட்சியின் தலைமை பொறுப்பில் தாயாக இருக்கும் எனக்கு தெரியும். இந்தக் கட்சியை நம்பி லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். எனவே யோசித்துத்தான் எதையும் முடிவு செய்ய முடியும். தொண்டர்கள் விரும்பும் வகையில் கூட்டணி அமையும்.

நல்லநேரத்தில் முடிவு எடுக்கப்படும். 2026 தேர்தலில் சரித்திரம் படைப்போம். நாங்கள் இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். பழுத்த மரம்தான் கல்லடிபடும் என்பார்கள். அப்படித்தான் இப்போது நிலைமை இருக்கிறது. எனவே, உங்களது செய்திகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை” என்று ஆவேசமாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும், “தேர்தல் அறிவிக்க நாட்கள் உள்ளது. இன்னும் பிப்ரவரி மாதம் வரை காலம் இருக்கிறது. எனவே கூட்டணியை அறிவிப்பதில் கால தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. யார் மதிப்பு கொடுப்பார்களோ, அந்த இடத்தில் தேமுதிக இருக்கும்” என்றார்.

கூட்டணி தொடர்பான கேள்விகளின்போது பிரேமலதா விஜயகாந்த், டென்ஷனானார். மேலும், “நாங்கள் எங்கள் குடும்பத்துக்குள் பேசுவதையெல்லாம் பொதுவெளியில் சொல்ல முடியாது. உங்கள் குடும்பத்தில் பேசுவதையெல்லாம் வெளியே சொல்வீர்களா?’’ என்று செய்தியாளர்களிடம் எதிர் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற நேரிடையான கேள்விக்கு, ‘உரிய நேரத்தில் கண்டிப்பாக விளையாடுவோம்’ என்று மழுப்பினார். டாஸ்மாக் இல்லாத தமிழகம் என்பதை தேர்தல் வாக்குறுதியாக அளிப்பீர்களா என்ற கேள்விக்கு, கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையில் அதை சொல்வதற்கு வலியுறுத்துவதாக தெரிவித்தார்.