பட்டியல் வெளியேற்றம் தொடர்பாக தேவேந்திர குல சமூகத்தினரின் கருத்துகளை கேட்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த மானகிரி வழக்கறிஞர் செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, வைகை ஆற்றங்களையோரங்களில் தேவேந்திர குல சமூக மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்த சமூக மக்களுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற பிறகே கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் கிடைத்தது.
ஆனால் சிலர் தனிப்பட்ட லாபத்துக்காக முழு சமூகமே முன்னேற்றமடைந்ததாக தவறான கருத்துகளை பரப்பி தேவேந்திர குல சமூகத்தை பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த தவறான பிரச்சாரம் காரணமாக எங்கள் சமூக இளைஞர்கள் அட்டவணைப்படுத்தப்பட்ட பட்டியலில் இருப்பது அவமானம் என்ற கருத்தில் உள்ளனர். உண்மையில் தேவேந்திர குல சமூகத்தினர் இன்னும் தொழில், கல்வி, சமூக பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறாத நிலையில் தான் உள்ளனர்.
இந்நிலையில் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டால் தேவேந்திர குல சமூகத்தினர் மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படுவர். எனவே, பட்டியல் வெளியேற்றம் குறித்து அரசு ஏதேனும் முடிவு எடுக்கும் நிலையில், சமூக மக்களின் உண்மையான கருத்தை நேரடி கள ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இறுதி முடிவெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பியுள்ளேன். அந்த மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு இன்று விசாரித்தது. பின்னர் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

