இந்தியா உடனான ஐரோப்பிய யூனியனின் ஒப்பந்தம் ஏமாற்றமளிக்கிறது: அமெரிக்கா

10 0

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 27-ம் தேதி நிறைவடைந்தது. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்கும் அமலுக்கு வரும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த வர்த்தக ஒப்பந்தம், அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று ஐரோப்பிய ஆணைய தலை​வர் உர்​சுலா வான்டெர் லேயன் வர்ணித்துள்ளார். இது இந்தியா-ஐரோப்பா இடையே பொருளாதார உறவை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதோடு, இந்தியர்கள் அதிக அளவில் ஐரோப்பிய நாடுகளில் பணிபுரிவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா உடனான ஐரோப்பிய யூனியனின் ஒப்பந்தத்தை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட், ‘‘அவர்கள் அவர்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்ய வேண்டும். ஆனால், ஐரோப்பியர்களை ஏமாற்றம் அளிப்பவர்களாக நான் காண்கிறேன்.

இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. அதை சுத்திகரித்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விற்கிறது. இதற்காகத்தான் அமெரிக்கா, இந்தியாவுக்கு எதிராக 25% இறக்குமதியை விதித்தது. ஆனால், உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் ஐரோப்பிய யூனியன், இவ்விஷயத்தில் அமெரிக்காவுடன் இணையவில்லை. இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை செய்ய விரும்பியதுதான் இதற்குக் காரணம் என்பது இப்போது தெரிகிறது.

ஒரு ஐரோப்பியர் உக்ரைன் மக்கள் குறித்துப் பேசும்போதெல்லாம், அவர்கள் உக்ரைன் மக்களைவிட வர்த்தகத்துக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர், இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கே அதிக நன்மை கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார். ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஜேமிசன் கிரீர், ‘‘இந்த ஒப்பந்தத்தை வியூக ரீதியாக புரிந்து கொள்வது முக்கியம். அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து, அமெரிக்க சந்தையை அணுகும் மற்ற நாடுகளுக்கான வரியை உயர்த்தினார். இதனால், அந்த நாடுகள் தங்களின் அதிகப்படியான உற்பத்திக்கு மற்ற வழிகளைத் தேடுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் அப்படித்தான் இந்தியாவை நாடியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தகத்தை அதிகம் சார்ந்திருக்கிறது. அவர்களால் தங்கள் பொருட்களை தொடர்ந்து அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாவிட்டால், அவர்களுக்கு மாற்று வழிகள் தேவை. இந்தியா உடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தின் சில விவரங்களை நான் பார்த்திருக்கிறேன். வெளிப்படையாகச் சொன்னால், இதில் இந்தியாவுக்கே அதிக நன்மை என்று நான் நினைக்கிறேன்.

ஏனெனில், இந்தியாவுக்கு ஐரோப்பாவில் அதிக சந்தை அணுகல் கிடைக்கிறது. மேலும், அவர்களுக்கு கூடுதலான குடியேற்ற உரிமைகளும் கிடைப்பதாகத் தெரிகிறது. இதுபற்றி எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் வான் டெர் லேயன், இந்திய தொழிலாளர்கள் ஐரோப்பாவுக்கு இடம்பெயர்வது குறித்துப் பேசியுள்ளார். எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த ஒப்பந்தத்தால் இந்தியா மிகப்பெரிய செழிப்பை காணப்போகிறது என்று நான் நினைக்கிறேன்.

இந்தியாவில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர் சக்தி இருக்கிறது. உலகமயமாக்கலின் சில சிக்கல்களைச் சரி செய்ய அமெரிக்கா முயற்சிக்கும் வேளையில், ஐரோப்பிய ஒன்றியம் உலகமயமாக்கலில் மேலும் தீவிரமாகச் செயல்படுவது போல தெரிகிறது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா படிப்படியாக குறைத்துக்கொள்ளும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதில், அவர்கள் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளனர். எனினும், இதில் அவர்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது. தள்ளுபடி விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய்யை கொடுப்பதை அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

எனவே, அதை முழுமையாக கைவிடுவது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்திருப்பதால், இந்தியா படிப்படியாகக் குறைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதேநேரத்தில், இதை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்’’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.