தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், தற்போதைய அரசியல் சூழலில் சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்கின்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குற்றாலம் பிரதான அருவியை பார்வையிட்ட அவர், குற்றாலநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சுற்றுலாத் தளமான குற்றாலத்தின் மூலம் ஏராளமானவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை ஆண்டு முழுவதும் உறுதி செய்யும் வகையில், குற்றால அருவியின் மேல்பகுதியில் செண்பகாதேவி அருவி அருகே அணை கட்டினால் குற்றால அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தர வாய்ப்புள்ளது. நாங்கள் எந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும் இந்த கோரிக்கையை முன் வைப்போம்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது. சென்னையில் வட மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் சமீப காலங்களாக சட்டம் – ஒழுங்கு என்பது மிகவும் சீர்குலைந்து வருகிறது. மக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய சூழலில் 4 முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது. தேமுதிக இந்த தேர்தலில் தனித்து போட்டியிடாது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ள நிலையில் சரியான நேரத்தில், சரியான கூட்டணி அமைத்து, கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்” என்று தெரிவித்தார். அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

