சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், போக்சோ சட்ட விதிகளை பின்பற்றாத காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துறை ரீதியான விசாரணையின் நிலை என்ன என்பது குறித்து நாளை (ஜன.29) அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார் தாக்கியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
அதேபோல, இழப்பீடு வழங்கக் கோரியும், போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள், நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தை பின்பற்றாமல் தவறிழைத்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இதற்கு அதிருப்தி நீதிபதிகள், குற்ற வழக்குப் பதிவு செய்வது வேறு; துறை ரீதியான நடவடிக்கை வேறு என தெரிவித்தனர். அதற்கு, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக 2024-ம் ஆண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், 15 மாதங்கள் கடந்த நிலையில், துறை ரீதியான நடவடிக்கை என்ன நிலையில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, சட்டத்தை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே போக்சோ விதிமுறைகளை மீறியுள்ளதாக கூறிய நீதிபதிகள், போக்சோ சட்ட நடைமுறைகள் குறித்து போலீஸாருக்கு விழிப்புணர்வு இல்லை என்று கண்டனம் தெரிவித்தனர்.
தவறிழைத்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வது தண்டனை அல்ல என தெரிவித்த நீதிபதிகள், தவறிழைத்த அதிகாரிகளை காப்பாற்ற அரசு துடிப்பது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீதான துறை ரீதியான நடவடிக்கை என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

