“திமுக வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி வேண்டுகோள் வைத்த மருத்துவத் துறை ஒப்பந்த ஊழியர்களை, ‘தேர்தல் நேரத்தில் போராடுவது ஃபேஷன் ஆகிவிட்டது’ என்று கொச்சைப்படுத்தியிருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசுத் துறைகளில், பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 153-ல் கூறியிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி வேண்டுகோள் வைத்த மருத்துவத் துறை ஒப்பந்த ஊழியர்களை, ‘தேர்தல் நேரத்தில் போராடுவது ஃபேஷன் ஆகிவிட்டது’ என்று கொச்சைப்படுத்தியிருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கொரோனா பெருந்தொற்று காலங்களிலும், தங்கள் உயிரைக் குறித்துக் கவலைப்படாமல், மக்களுக்காக உழைத்த மருத்துவத் துறை ஊழியர்களை அவமானப்படுத்திய அவருக்கு, கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கில், தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில், அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு, இன்று வாக்குறுதியை நிறைவேற்றக் கோரும் மக்களை, அவமானப்படுத்துவது திமுகவின் வழக்கமாகிவிட்டது.
தமிழக மக்களை எத்தனை கிள்ளுக்கீரையாக நினைத்திருந்தால், கடந்த 2021 தேர்தல் வாக்குறுதிகளில் பத்து சதவீதம் கூட நிறைவேற்றாமல், 2026 தேர்தலுக்கு, மீண்டும் ஓர் ஏமாற்றுக் கூட்டத்தை தேர்தல் வாக்குறுதிகள் தயாரிக்க அமைத்திருப்பார் முதல்வர் ஸ்டாலின்” எனத் தெரிவித்துள்ளார்.

