“வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை, என்னை நம்பி வந்த 5 பேருக்கு சீட் வாங்கி கொடுப்பதே எனது எண்ணம்” என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: பாஜக கூட்டணியில் யார், யார் சேருகிறார்கள் என்பதை கட்சியின் மாநில தலைவர் அறிவிப்பார். பாஜக கூட்டணி குறித்து குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். தேர்தல் களத்தில் மக்கள் வாக்களிக்கும் போது எந்தக் கூட்டணி வலுவான கூட்டணி என்பது தெரியும். விஜய் மட்டுமல்ல எல்லா கட்சிகளுமே ஊழலுக்கு எதிராக தான் பேசுகிறார்கள்.
அவர் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை. கூட்டணி ஆட்சியா அல்லது தனி கட்சி ஆட்சியா என்பது தேர்தல் முடிந்து ஆட்சி அமைக்கும் போது எங்கள் கட்சி மாநில தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசி எடுக்க வேண்டிய முடிவு. அது பற்றி நான் கருத்து கூற முடியாது. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கி தருவது தான் எங்களை போன்ற நிர்வாகிகளின் பொறுப்பு. தலைமை என்ன கூறுகிறதோ, அதற்கு கட்டுப்பட்டு செயல்படுவேன்.
இந்த தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. என்னுடன் பயணிப்பவர்களுக்கு வாய்ப்பை வாங்கி தர வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறேன். இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்காக அயராது உழைக்க உறுதி எடுத்துக் கொண்டுள்ளேன். என்னுடன் பயணித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். கடின உழைப்பாளிகளான அவர்களுக்கு 5 இடங்களையாவது பெற்று தர வேண்டும் என நினைக்கிறேன். இது தொடர்பாக மாநில தலைவரிடம் பேசவுள்ளேன். நான் போட்டியிடாத போது ராதிகாவும் போட்டியிடமாட்டார்.
சிறுபான்மையினருக்கு பாதுகாவலர்கள் என கூறுபவர்கள் சிறுபான்மையினருக்கு என்ன செய்தார்கள் என்பதை ஒரு பட்டியல் போட்டு கொடுத்தால் நன்றாக இருக்கும். எந்த வகையில் அவர்களுக்கு துன்பம் வந்தது, எந்த வகையில் இவர்கள் பாதுகாவலர்களாக இருந்தார்கள் என்பதை தெளிவாக கூற வேண்டும். 30 ஆண்டுகளாக சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என கூறி வருபவர்கள் இதனை தெளிவுபடுத்த வேண்டும்.
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மீது பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டக்கூடாது. எல்லா இடங்களுக்கும் பிரதமர் போக வேண்டிய அவசியம் இல்லை. அவரது பிரதிநிதிகள் எல்லா இடங்களுக்கும் போய் பார்க்கிறார்கள்.
இதே கேள்வியை நடிகர் விஜய்யிடம் கேட்கலாமே. கரூர் சம்பவத்தில் இறந்த 41 பேர் குடும்பத்தை பார்க்க முடியாமல் இருக்கிறார். அவரை முதலில் வீட்டை விட்டு வெளியே வந்து பேசச் சொல்லுங்கள். தவெகவுக்கும், திமுகவுக்கும் மட்டும் தான் போட்டி என எழுதி கொடுத்ததை விஜய் படித்துள்ளார். அதை தாண்டி அவருக்கு எதுவும் தெரியாது.

