தவெகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸுக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்வினையாற்றியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் மரணம் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்.
எங்கள் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி பூஸ்ட், ஹார்லிக்ஸ் கொடுத்துள்ளார். எங்களுக்கு யாரும் பூஸ்ட் தரத் தேவையில்லை. இருந்தாலும் எங்களுக்கு பூஸ்ட் கொடுப்பதாக சொன்னதுக்கு நன்றி. மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். காங்கிரஸ் விரைந்து செயல்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் இது எதிரொலிக்கும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “விஜய்க்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு சரித்திரம், பாரம்பரியம், வரலாறு இருக்கிறது. அப்படி வரலாறு மிக்க கட்சி ஏன் இப்போது தேய்ந்து விட்டது. ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து, ஆதரவு கொடுத்து அவர்கள் தேய்ந்து விட்டார்கள். காங்கிரஸ் கட்சிக்குப் பவர் தருவதாக விஜய் சொல்கிறார். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.

