“கடந்த 2021 தேர்தல் வாக்குறுதியில் 15 சதவீதத்தை கூட நிறைவேற்றாததால் இந்தமுறை தேர்தல் அறிக்கை திமுகவுக்கு கதாநாயகனாகவோ, கதாநாயகியாகவோ இருக்காது; அவர்களை திருப்பித் தாக்கும் வில்லனாக தான் மாறும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர்ராஜூ விமர்சனம் செய்தார்.
சிவகங்கையில் இன்று நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டனர். பின்னர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகி விட்டது. அதிமுக கூட்டணி நிச்சயமாக 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எங்களை பற்றி பேசாதவர்களை, நாங்கள் விமர்சனம் செய்வதில்லை என்பது அதிமுகவின் மரபாக உள்ளது. விஜய் எங்களை விமர்சித்ததால், அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்போது அதிமுக ஒன்றாகதான் இருக்கிறது. இதில் யாரும் இணைவதற்கு என்ன இருக்கிறது?
தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருப்பதால் திமுகவுக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டது. திமுக தான் ஓடாத இன்ஜின். அது இனியும் ஓடாது. மு.க.ஸ்டாலின் கூறுவது போல் இனி திமுகவுக்கு 2 பாயின்ட் ‘ஓ’ கிடையாது; 2 பாயின்ட் ஜீரோ தான்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் இணைய வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியிருப்பது அவரது விருப்பம். அது பற்றி நாங்கள் எப்படி கூற முடியும்.
கடந்த 2021 தேர்தல் வாக்குறுதியில் 15 சதவீதத்தை கூட நிறைவேற்றாததால் இந்தமுறை தேர்தல் அறிக்கை திமுகவுக்கு கதாநாயகனாகவோ, கதாநாயகியாகவோ இருக்காது; அவர்களை திருப்பித் தாக்கும் வில்லனாக தான் மாறும்.
பேச்சுவார்த்தை முடிவதற்கு முன்பே தேமுதிவுடன் கூட்டணி குறித்து கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

