ஈரான் மீதான தாக்குதலுக்கு துணைபோக மாட்டோம்: சவூதி அரேபியா அறிவிப்பு

29 0

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சவூதி பத்திரிகை நிறுவனம் (SPA) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது, ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதில் சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டை இளவரசர் உறுதிப்படுத்தினார்.

மேலும், ‘ஈரானுக்கு எதிரான எந்த ஒரு ராணுவ நடவடிக்கைக்காகவும் சவூதி அரேபியா தனது வான்வெளியையோ, நிலப்பரப்பையோ பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது. எந்த ஒரு நாடாக இருந்தாலும் இவ்விஷயத்தில் சவூதி அரேபியா உறுதியுடன் இருக்கும்.

பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றம் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட எந்த ஒரு முயற்சிகளுக்கும் சவூதி அரேபியா ஆதரவு அளிக்கும்’ என்று இளவரசர், ஈரான் ஆட்சியாளரிடம் உறுதிபட தெரிவித்தார்.

இதையடுத்து, சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் அதிபர் பாராட்டு தெரிவித்தார். மேலும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கான பட்டத்து இளவரசரின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை எடுப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. மத்தியக் கிழக்கில் நிகழ்ந்து வரும் அமெரிக்காவின் ராணுவக் குவிப்பு குறித்து குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘‘இப்போது மற்றொரு அழகான போர்க்கப்பல், ஈரானை நோக்கி அழகாகச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, பார்ப்போம். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்வார்கள் என நம்புகிறேன். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். அவர்கள் முதல் முறையே ஒரு ஒப்பந்தம் செய்திருந்தால், அவர்களுக்கு ஒரு நாடு இருந்திருக்கும்’’ என்று தெரிவித்திருந்தார்.

ஈரானில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு அளித்து வருகிறார்.

ஈரான் போராட்டங்களின் 31வது நாள் நிலவரப்படி இதுவரை 6,221 பேர் உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 5,858 பேர் போராட்டக்காரர்கள். 214 பேர் அரசாங்கத்துடன் தொடர்புடைய படைகளைச் சேர்ந்தவர்கள். போராட்டத்தில் ஈடுபடாத பொதுமக்களில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி, 17,091 பேரின் இறப்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,324. ஈரானின் 31 மாகாணங்களில் 201 நகரங்களில் போராட்டம் தொடர்பாக 656 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.