தலைமை கணக்காய்வாளர் நாயகம் பதவி வறிதாகியுள்ளதால் ஒருசிலர் நாட்டின் நிதி நிலைமை குறித்து தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். கணக்காய்வு திணைக்களத்தில் நீண்டகாலம் சேவையாற்றி சிறந்த அனுபவமுள்ள சிரேஷ்ட அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை தலைமை கணக்காய்வாளராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பது உகந்ததாக அமையும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் எழுத்துமூலமாக அனுப்பி வலியுறுத்தியுள்ளனர்.
மல்வத்து, அஸ்கிரி, ஸ்ரீ லங்கா அமரபுர மற்றும் ஸ்ரீ லங்கா ராமான்ய நிகாய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் 41 ஆவது கணக்காய்வாளர் நாயகம் 2025.04.09 ஆம் திகதியன்று சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றார். 2025.04.09 ஆம் திகதி முதல் 2025.12.05 ஆம் திகதிவரை பதில் கணக்காய்வாளர் நாயகமாக தேசிய கணக்காய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான தர்மபால கம்மன்பில நியமிக்கப்பட்டார்.
இந்த இடைப்பட்ட காலத்திலும், பதில் கணக்காய்வாளருக்கு வழங்கப்பட்ட வரையறுக்கப்பட்ட சேவைகாலம் நிறைவடைந்த பின்னரும் தலைமை கணக்காய்வாளர் பதவிக்கு நிரந்தரமாக ஒருவர் நியமிக்கப்படவில்லை.
இவ்வாறான பின்னணியில் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் மாறுப்பட்ட நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். குறிப்பாக ஜனாதிபதி உட்பட அரசாங்கம் அறிமுகப்படுத்திய பொருளாதார கொள்கைத் திட்டத்தை தவறான நிலைப்பாட்டை சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
தலைமை கணக்காய்வாளர் பதவிக்கு ஜனாதிபதியால் இரண்டுமுறை முன்மொழியப்பட்ட பெயரை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.ஒருசில சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கணக்காய்வு திணைக்களத்தில் நீண்டகாலம் சேவையாற்றி சிறந்த அனுபவமுள்ள சிரேஷ்ட அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை தலைமை கணக்காய்வாளராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பது உகந்ததாக அமையும் என வலியுறுத்தியுள்ளனர்.

