பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துச் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதற்கமைய இவ்வாறான சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.வுட்லர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் தற்போது பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்த, பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் ‘ஐஸ்’ பழம், பொம்பாய் மிட்டாய், டொபி, பிஸ்கட் மற்றும் சாரவிட்டா போன்ற தின்பண்டங்கள் ஊடாக மாவா மற்றும் பாபுல் போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்யும் புதிய முறையை ஒருசில குழுவினர் கையாண்டு வருகின்றனர். உடல் ஆரோக்கியத்துக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புகையிலை மற்றும் பாக்கு கலந்த இந்த மாவா, பாபுல் தயாரிப்புகளுடன் கஞ்சா போன்ற நச்சுப் போதைப்பொருட்களையும் கலந்து விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு நச்சுப் போதைப்பொருட்களைக் கலந்து பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வோருக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது. நாடளாவிய ரீதியில் பொலிஸார் இவ்வாறான வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிவதற்காகச் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அத்தோடு பாடசாலைகளுக்கு அருகில் இவ்வாறான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 11 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டத்திருத்தங்களுக்கு அமைய 5 கிராமுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் அல்லது கொக்கேன் ஆகிய போதைப்பொருட்களை வைத்திருப்பவர்களுக்கு மேல் நீதிமன்ற விசாரணைகளின் பின் ‘மரண தண்டனை’ விதிக்கப்படும் என்பதைப் பொதுமக்கள் உணர வேண்டும். அத்தோடு சந்தேகத்திற்கிடமான நபர்கள், சொத்துக்கள் அல்லது வாகனங்கள் குறித்துத் தகவல் தெரிந்திருப்பின் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவிக்கவும். தகவல் வழங்கத் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், உங்கள் உறவினரோ அல்லது பிள்ளையோ இந்தப் போதைக்கு அடிமையாகும் வாய்ப்பு உள்ளது என்றார்.

