இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு: 5 பேருக்கு தொற்று உறுதி – இலங்கையில் சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

13 0

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் வைத்தியசாலைப் பணியாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் தொற்றாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட சுமார் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

பழம் தின்னும் வௌவால்கள் (Fruit Bats) மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களிடையே பரவுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் தொற்றின் ஆரம்பகட்ட அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை காணப்படுகின்றன. நோய்த்தொற்று தீவிரமடைந்தால் மூளை அழற்சி (Encephalitis) ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடக்கூடும்.

நிபா வைரஸிற்கு இதுவரை தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை. இதனால், இந்த வைரஸ் உலக சுகாதார அமைப்பின் (WHO) முன்னுரிமை நோய்த்தொற்று பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

முன்னைய நிபா வைரஸ் பரவல்களின் போது, இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை இருந்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிபா வைரஸ் தொற்றை தொடர்ந்து, இலங்கையில் சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

“தற்போதைக்கு இலங்கைக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இருப்பினும், பிராந்திய நிலைமைகளை கவனமாக கண்காணித்து வருகிறோம். சர்வதேச சுகாதார அமைப்புகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து, மலேசியா, நேபாளம், தைவான் உள்ளிட்ட பல நாடுகளின் விமான நிலையங்களில் சுகாதார பரிசோதனைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

பிராந்திய நாடுகள் அனைத்தும் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.