“விஜய்யின் அழிச்சாட்டியத்தால்…” – செல்லூர் ராஜூ ‘திடீர்’ விரக்தி

24 0

”விஜய் போன்றவர்களின் அழிச்சாட்டியத்தால் அரசியலை விட்டே போயிடலாம் போல இருக்கு” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி கோவில் பாப்பாக்குடி ஊராட்சி மேற்கு தெருவில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வடிகால் பணிகளை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணியை பலம் பொருந்திய கூட்டணி என்று பேசுகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி எங்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்கிறது. வைகோ கருணாநிதி ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பேசியவர். ஆனால், இன்று திமுக கூட்டணியில் சேர்ந்து கூடுதல் சீட்டு கேட்போம் என்று சொல்கிறார்.

யாருக்காவது ‘டார்ச் லைட்’ ஞாபகம் இருக்கிறதா? ஊழல், வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்று டார்ச் லைட்டை வீசி டிவியை உடைத்த கமல் இன்று அக்கூட்டணியில் சேர்ந்து கூடுதல் ‘சீட்’ கேட்கிறார். இன்று உலக நாயகன், நகைச்சுவை நாயகனாக மாறிவிட்டார்.

நடிகர் என்ற முகத்தை வைத்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். நடிகர்கள். இப்படியே புறப்பட்டு விட்டார்கள். நடிகர் என்றாலே ஓட்டு போட்டு விடுவார்கள். முகத்தைப் பார்ப்பதற்கு தான் கூட்டம் கூடுவார்கள். ஓட்டு போட மாட்டார்கள். எம்ஜிஆர் மினிமம் கேரண்டி நடிகர். ஆனால், விஜய் வைத்து படம் எடுத்தவர்கள் பலர் தெருவில் நிற்கிறார்கள். அரசியலில் நிற்க வேண்டுமென்றால் களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும்.” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் செல்லூர் ராஜூவிடம், ”எல்லோரும் கட்சி தொடங்கிவிட்டுதான் ஓட்டு சேகரிக்க தொடங்குவார்கள், ஆனால், நாங்கள் வீட்டிற்கு ஒரு ஓட்டை வைத்துக் கொண்டுதான் கட்சியே தொடங்கினோம்” என்று தவெகவினர் கூறுகிறார்களே, இதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ”வாயில் அல்வா கொடுப்பார்கள். வாயில் வடை சுடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஓட்டு இருப்பதை இவர் நுழைந்து பார்த்தாரா? கணக்கெடுத்தாரா?.

இதெல்லாம் சும்மா ஒரு பில்ட்- அப் தான், கதாநாயகனாக இருந்தவர் அதைத்தானே செய்வார். சினிமாவில் வேண்டுமென்றால் ஒரே நேரத்திலே 10 பேரை அடிக்கலாம். நிஜத்தில் யாராலும் பத்து பேரை அடிக்க முடியுமா ?.

41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வரவழைத்து ஆறுதல் கூறுகிறார். இதெல்லாம் பார்க்கும்போது, என்ன அரசியல் வாழ்க்கை, பொது வாழ்க்கை என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்களைப் போன்றவர்கள் அழிச்சாட்டியத்தால் அரசியலை விட்டே போயிடலாம் போல் இருக்கிறது. இந்த கட்சியெல்லாம் இருக்குமென்று நினைக்கிறீர்களா? எனக்கு என்னமோ சந்தேகமாக உள்ளது” என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.