கட்சி தொடங்கப்பட்ட மேலூரை கேட்கும் அமமுக: அதிர்ச்சியில் மதுரை அதிமுக!

83 0

அமமுக தொடங்கப்பட்ட மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதியை, அதிமுக கூட்டணியில் தினகரன் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கால் நூற்றாண்டாக வெற்றி பெற்று அதிமுகவின் கோட்டையாக இருக்கும் இந்த தொகுதியை அமமுக கேட்பதால், மதுரை மவாட்ட அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதிமுக – பாஜக கூட்டணியில் தற்போது இடம்பெற்றுள்ள கட்சியினர் தங்கள் விருப்பமான தொகுதிகள் பட்டியலை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக மேலிடத்திடம் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை மதுரை மாவட்டத்தில் அதிமுக 8 தொகுதிகளில் போட்டியிட்டு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த முறையும், ஐந்து தொகுதிகளையும் கூட்டணிக்கு விட்டுக்கொடுக்காமல் போட்டியிட அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. இந்த ஐந்து தொகுதிகளிலும் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று அதன் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இவற்றில் உச்சமாக மேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக 2001-ம் ஆண்டு முதல் கால் நூற்றாண்டு வெற்றிப்பெற்று வருகிறது.

மொத்தம் இந்த தொகுதியில் 6 முறை அதிமுக வெற்றி பெற்று இருக்கிறது. ஆரம்ப காலத்தல் காங்கிரஸ், திமுக இந்த தொகுதியில் வெற்றிப்பெற்று வந்துள்ளன. அதன்பிறகு அதிமுக வசம் இந்த தொகுதி முழுமையாக வந்துவிட்டது. இந்த முறையும், அதிமுக இந்த தொகுதியில் களம் இறங்குவதற்கு அந்த தொகுதிக்குட்பட்ட புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, மேலூர் பகுதி நிர்வாகிகளுடன் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பிருந்தே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் திடீரென்று அமமுக இணைந்த நிலையில் தினகரன், மேலூர் தொகுதி விரும்பிக் கேட்பதாக கூறப்படுகிறது. அமமுக கட்சி, மேலூரில் தான் தொடங்கப்பட்டது என்பதால் அந்த சென்டிமெண்ட்டில் அங்கிருந்து தனது கட்சி எம்எல்ஏ சட்டமன்றத்திற்கு செல்வதற்கு தினகரன் விருப்பப்படுவதாக கூறப்படுகிறது. இன்னும் கூட்டணியில் தொகுதிகளை முடிவு செய்யும் கூட்டணி பேச்சுவார்த்தை முழுவீச்சில் தொடங்காத நிலையில், அமமுகவின் விருப்பத்தில் மதுரை மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அமமுகவினர் கூறுகையில், ”கடந்த சட்டமன்ற தேர்தலில் மேலூர், உசிலம்பட்டி தொகுதிகளில் எங்கள் கட்சி வேட்பாளர் கனிசமான வாக்குகளை பெற்றுள்ளனர். மேலும், மதுரையில் ஒரு தொகுதியாவது போட்டியிட வேண்டும் என்று அமமுக திட்டமிடுகிறது. அதனால், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றை கேட்கிறோம். கிடைக்கும் என்று நம்புகிறோம். இல்லாவிட்டால் மதுரை கிழக்கு தொகுதியை கேட்போம்.

தற்போது டிடிவி தினகரனும், பழனிசாமியும் ராசியாகிவிட்டதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தேர்தல் பணியாற்ற தொடங்கிவிட்டனர். அதனால், தொகுதி பங்கீட்டில் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் வராது,” என்று அமமுகவினர் கூறியுள்ளனர்.