“நீங்கள் எந்த கனவோடு இங்கு வந்தாலும், நிச்சயம் தமிழக பெண்கள் சரியான பாடத்தை உங்களுக்கு சொல்லித்தருவார்கள்” என பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி கனிமொழி பதிலளித்துள்ளார்.
‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாடு தஞ்சாவூரில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி, “வெல்லும் தமிழ்ப் பெண்கள் இரண்டாவது மாநாடு தஞ்சையில் எழுச்சியோடு நடத்துகிறோம். இப்போது பலரும் பல்வேறு கனவுகளோடு பல திசைகளில் இருந்து தமிழகத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டுள்ளனர். உள்ளூரிலிருந்தும் சில படையெடுக்கிறார்கள். நமக்கு ஏதும் வாய்ப்பு கிடைக்குமா என அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால், இங்கு கூடியுள்ள படை அவர்களுக்கு பதில் சொல்லியிருக்கும்.
தமிழக மக்கள் தெளிவானவர்கள். அதைவிட தமிழக பெண்கள் புத்திசாலிகள். வாய்ச் சவடால் விட்டு இங்கு ஆட்சி செய்ய முடியாது. முதல்வர் ஸ்டாலினால் தான் பெண்கள் நல ஆட்சியை நடத்த முடியும்.
யார் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள் என தமிழக பெண்களுக்குத் தெரியும். நான் 10 ஆயிரம், 8 ஆயிரம் கொடுக்கிறேன். ‘குலவிளக்கு’ திட்டத்தில் 2 ஆயிரம் கொடுக்கிறேன் என யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், யாராலும் எதுவும் வராது என தெரியும். முன்பு ஸ்கூட்டி கொடுப்பேன் என சொன்னார்கள். வந்ததா?. அதுபோல குலவிளக்கும் வீட்டுக்கு வராது எனத் தெரியும். ஆனால், மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் உங்கள் வீட்டுக் கதவை தட்டி வரும்.

