எங்கள் இருள் சூழ்ந்த வாழ்வை முதல்வர்தான் விடியலுக்கு கொண்டு வரவேண்டும் – பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு

8 0

மறு நியமனத் தேர்வு இல்லாமல் பட்டாதரி ஆசிரியர், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்பி, எங்கள் இருள் சூழ்ந்த வாழ்வை முதல்வர் ஸ்டாலின் தான் விடியலுக்கு கொண்டு வரவேண்டும் என 2023-ம் ஆண்டு நியமனத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பட்டாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து நியமனத் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் எம்.கலைவாணி, எம்.மோகன்ரஜ், எஸ்.பாஸ்கர் ஆகியோர் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: தமிழத்தில் கடந்த 2023-ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் (பிடி) , வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் (பிஆர்டிஇ) நியமனத் தேர்வில் 37,000 பேர் ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) 2023-ம் ஆண்டு, 3,192 பிடி, பிஆர்டிஇ காலிப்பணியிடங்களை அறிவித்தது. இதில் ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்து 2,800 காலிப்பணியிடங்களை அரசு நிரப்பி உள்ளது. மீதம் 392 பணியிடம் நிரப்பவில்லை. இதுதொடர்பாக இரண்டாவது பணி நியமனப் பட்டியலையும் அரசு வெளியிடவில்லை. இதுதவிர, 726 பிஆர்டிஇ பணியிடங்கள் நிரப்பாமல் கடந்த 15 ஆண்டுகளாக காலியாகவே உள்ளன.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிஆர்பியின் ஆண்டு திட்டத்தில் 1,205 பிடி, பிஆர்டிஇ காலிப்பணியிடங்களுக்கு மறு நியமனத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதுதொடர்பான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளது. பலமுறை தகுதித்தேர்வு, தமிழ் தகுதித்தேர்வு, 2023 ஆசிரியர் நியமனத் தேர்விலும் தேர்ச்சி அடைந்து 34,200 பேர் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கிறோம். அப்படியிருக்கையில் மீண்டும் எதற்கு ஆசிரியர் நியமனத் தேர்வை அரசு நடத்த வேண்டும்?

பிடி, பிஆர்டிஇ என தேர்வு வைத்துவிட்டு பிடி பணியிடங்கள் மட்டும் நிரப்பி உள்ளனர். பிஆர்டிஇ பணியிடங்கள் நிரப்பவேயில்லை. விடியல் அரசு என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் நியமனத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டாதரி ஆசிரியர்களின் வாழ்வு இருள் சூழ்ந்து கிடக்கிறது. எங்கள் இருள் சூழ்ந்த வாழ்க்கையை முதல்வர் ஸ்டாலின் தான் விடியலுக்கு கொண்டு வரவேண்டும். நாங்கள் எத்தனை ஆண்டுகள் தான் தேர்வுகளை எழுதிக் கொண்டே இருப்பது? தேர்வு எழுதி எழுதியே எங்கள் தலைமுறையே முடிந்துவிட்டது.

ஏற்கனவே ஆசிரியர்கள் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு தற்போது அறிவித்துள்ள 1,025 மற்றும் 726 பிஆர்டிஇ பணியிடங்களை அரசு நியமிக்க முன் வரவேண்டும். இதுதொடர்பாக தேர்தலுக்கு முன்னதாகவே அரசாணை வெளியிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை இன்று சந்தித்தபோது, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.