அரசியல் நடத்த ஆயிரம் வழி இருக்கிறது; மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்: வானதி சீனிவாசன்

15 0

அரசியல் நடத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம் என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் கல்வியாண்டு முதல், தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட் )அடிப்படையிலேயே, இளங்கலை பிசியோதெரபி (பிபிடி), இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (பிஓடி) ஆகிய பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என, தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ’எம்பிபிஎஸ் போல மற்ற துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் அபாயம் இருப்பதாக, நாங்கள் எச்சரித்து வந்தது உண்மையாகிவிட்டது. எதிர்காலத்தில் அனைத்து துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை கட்டாயமாக்கும், பெரிய திட்டத்தின் முதல்படியே இது” என்று கூறியுள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை அரசியலாக்கி, ஒவ்வொரு ஆண்டும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அச்சத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும் நம் தமிழ்நாட்டு மாணவர்கள், நீட் தேர்வில் பெரும் சாதனை படைத்து வருகின்றனர்.

சமூக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதை பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக பிபிடி, பிஓடி ஆகிய இரு பட்டப் படிப்புகளுக்கு மட்டும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

நான்கரை ஆண்டாக இருந்த பிபிடி பட்டப்படிப்பு, 5 ஆண்டாக மாறி நீட் தேர்வுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், பிசியோதெரபி படிப்புக்கு பெரும் மதிப்பும், அங்கீகாரமும் கிடைக்கும் என, பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தினர் வரவேற்று, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கோரிக்கையை ஏற்றே, மேற்கண்ட பட்டப்படிப்புகளுக்கு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதகாவும் தெரிவித்துள்ளனர்.

பிசியோதெரபி படிப்பு என்பது துணை மருத்துவப் படிப்பு அல்ல. அது அலைடு அன் ஹெல்த்ஹேர் புரபஷனல் பட்டப்படிப்பு என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது. முதலவர் ஸ்டாலின், பிசியோதெரபி பட்டப்படிப்புகளை, துணை மருத்துவப் படிப்புகள் என, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது பிசியோதெரபி படிப்புகளையும், பிசியோதெரபி மருத்துவர்களையும் குறைத்து மதிப்பிடும் செயல்.

நீட் தேர்வு என்பது பிசியோதெரபி பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு உலக அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தரும். நீட் தேர்வு எதிர்ப்பை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியை முதல்வர் மு. க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசியல் நடத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம். இது கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.