தமது அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டின் கலாசாரம், மதம் மற்றும் சட்டங்களுக்கு முரணாகவேனும் செயற்பட தற்போதைய ஆட்சியாளர்கள் தயாராக உள்ளமை லால் காந்தவின் உரையின் மூலம் தெளிவாகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
இதன் போது நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட மேலும் தெரிவிக்கையில்,
“கோட் அணிந்திருப்பவர்களைத் தாக்குவேன் எனக் கூறியது சட்டத்தைத் தாக்குவதாகும். காவி அங்கி அணிபவர்களைப் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் பொருள் அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்கள் உயிர்வாழ்விற்காக உள்ளூர் கலாச்சாரத்தையும் மதங்களையும் அழிக்கத் தயாராக .
ஜனாதிபதியின் மனம் சிறிதளவு காயப்பட்டாலும், பொலிஸ் மா அதிபரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் ஏனைய அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டு ஜனாதிபதியின் மனதை ஆற்றுப்படுத்துவதிலேயே குறியாக உள்ளனர்.
பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்த விதம் குறித்துக் குறிப்பிட்ட நாமல், மக்கள் ‘அன்தரே’யின் கதைகளைக் கேட்டுச் சிரித்துக் கைதட்டியதைப் போல இன்று பொய்களை நம்பி ஏமாந்துள்ளனர். இறுதியில் அன்தரே ராஜாவானதைப் போல, இன்று ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்து தனது குரோதத்தையும் பொறாமையையும் வெளிப்படுத்துகின்றார்.
இந்த அரசாங்கத்திடம் நிலையான ஒரு கொள்கை இல்லை. 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் 159 விதமான கொள்கைகளையே கொண்டுள்ளனர். சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO) மற்றும் USAID போன்றவற்றின் நிகழ்ச்சி நிரல்களை ஒரு குழு முன்னெடுக்கும் அதேவேளை, கட்சியின் ஆரம்பகாலக் கொள்கைகளை நம்பியிருந்த அடிமட்டத் தொண்டர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர்.
லெனின் அல்லது புரூஸ் லீயின் பாதையைப் பின்பற்றினாலும், இறுதியில் மக்கள் முன்னிலையில் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

