சூரிய சக்தி மின் உற்பத்தித் துறை முடங்கும் அபாயம்: 2,000 கோடி ரூபாய் இழப்பு என எச்சரிக்கை

4 0

இலங்கை மின்சார சபையினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தல் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக, நாட்டின் உள்ளூர் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சுமார் 2,000 கோடி ரூபாய் நிதி இழப்பை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்ட சூரிய சக்தி மின் உற்பத்தியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களாக, அதாவது 2025 பெப்ரவரி மாதம் முதல், வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் எந்தவித முன்னறிவிப்புமின்றி பெரிய அளவிலான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களின் மின் விநியோகத்தை மின்சார சபை கட்டுப்படுத்தி வருகின்றது.

இதனை ஒரு அவசர நிலை என்று மின்சார சபை கூறினாலும், நீண்டகாலமாகத் தொடரும் இந்த நடைமுறை மின் கொள்வனவு ஒப்பந்தங்களை (PPA) மீறும் செயல் எனவும், இதனால் உற்பத்தியாளர்களின் மாத வருமானம் 15 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் பிரபாத் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி குறைக்கப்படும் நேரங்களில் அந்த மின்சாரத்தைச் சேமித்து வைத்து, இரவு நேர உச்ச மின் தேவையின் போது பயன்படுத்துவதற்கான மின்கல சேமிப்பு முறைமைக்கு (BESS) அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சு ஆகியன அனுமதி வழங்கியுள்ள போதிலும், மின்சார சபை அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றே தாமதம் செய்வதாக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கான செயலாக்க வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் காட்டப்படும் இழுத்தடிப்பு காரணமாக, உள்நாட்டு சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாரியளவிலான டாலர்களைச் செலவழித்து டீசல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய மின்சாரக் கொள்கையானது சிறு மற்றும் நடுத்தர அளவிலான உள்ளூர் முதலீட்டாளர்களை இத்துறையிலிருந்து முற்றாக வெளியேற்றும் வகையில் அமைந்துள்ளதாகச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள உள்ளீட்டு கட்டண (FIT) முறையை ஒழித்து போட்டி ஏல முறையைக் கொண்டு வருவது மற்றும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் போது அதற்கான நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என்ற புதிய நிபந்தனைகள் முதலீட்டாளர்களுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. அரசாங்கத்தின் கொள்கை பிரகடனங்களுக்கு முரணாக மின்சார சபை எடுத்து வரும் இத்தகைய முடிவுகளால், இத்துறையில் முதலீடு செய்துள்ள பல தொழில்முனைவோர் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளனர். இது எதிர்காலத்தில் நாட்டின் வங்கி முறைமையில் செயலிழந்த கடன் நெருக்கடியை (NPL) உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மின்கல சேமிப்பு முறைமைக்கான ஒப்பந்தத் திருத்தங்களை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும், ஒப்பந்தங்களை மீறி மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான உற்பத்தித் தடையை நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் 2030 புதுப்பிக்கத்தக்க மின்சக்தி இலக்கை அடைவதற்குத் தனியார் துறையின் பங்களிப்பு அவசியம் என்பதால், அரசாங்கமும் மின்சக்தி அமைச்சும் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.