“கறிக்கோழி உற்பத்தியாளர் போராட்ட ஆதரவு விவசாயிகளை கைது செய்தது அராஜகம்” – நயினார் நாகேந்திரன்

21 0

“தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்புக்கான உற்பத்திக் கூலியை ரூ.6.50-லிருந்து ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென்ற போராட்டத்துக்கு ஆதரவளித்த விவசாயிகள் மற்றும் நிர்வாகிகளைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அராஜகத்தின் உச்சம்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்புக்கான உற்பத்திக் கூலியை ரூ.6.50-லிருந்து ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டுமெனப் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை சுமூகமாக முடித்து வைக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின், கடமையைக் கைகழுவி விட்டு வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அதிலும், இப்போராட்டத்திற்கு ஆதரவளித்த விவசாயிகள் மற்றும் நிர்வாகிகளைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அராஜகத்தின் உச்சம்.

தொடர் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் இயங்கி வரும் 40 ஆயிரம் கோழிப் பண்ணைகளில் பணிபுரியும் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, கறிக்கோழி உற்பத்தி சரிந்து விலைவாசி விண்ணை முட்டுமளவிற்கு உயர்ந்து வருவது தமிழக மக்களின் தலையில் தான் நிதிச்சுமையாக வந்து விடியும் என்பது விடியா அரசுக்குத் தெரியாதா?

பிற மாநிலங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு எல்லாம் முதல் ஆளாகப் போர்க்கொடி பிடிக்கும் திமுக அரசு, தமிழகப் போராட்டக்காரர்களின் மீது மட்டும் தொடர்ந்து அடக்குமுறையை ஏவுவது ஏன்?

சொந்த மக்களின் ஜனநாயகக் குரல்வளையை இரும்புக்கரம் கொண்டு நெறிக்கும் திமுகவிற்கு, மாநில உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?’ எனத் தெரிவித்துள்ளார்.