ஐரோப்பாவின் பொருளாதார நலன்களுக்கு இந்தியா அத்தியாவசியமானதாக மாறி வருவதாகவும், புதுடெல்லியில் நடைபெற உள்ள ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா உச்சி மாநாடு இரு தரப்புக்கும் இடையிலான உறவுகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற உள்ள குடியரசு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவும், வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள 16வது ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா இடையேயான உச்சிமாநாட்டில் பங்கேற்கவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்டத் தலைவர்கள் இந்தியாவுக்கு வர உள்ள நிலையில், அந்த அமைப்பின் உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: ஐரோப்பாவின் பொருளாதார மீள்திறனுக்கு இந்தியா அத்தியாவசியமானதாக மாறி வருகிறது. வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், மக்களுக்கு இடையேயான உறவு என பல துறைகளை உள்ளடக்கிய ஒரு வலிமையான புதிய செயல்திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து செயல்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது. புதுடெல்லியில் நடைபெற உள்ள சந்திப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
போர்கள், நிர்பந்தங்கள், பொருளாதார பிளவுகள் ஆகியவற்றால் சர்வதேச ஒழுங்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த நேரத்தில், இரண்டு பெரிய ஜனநாயக சக்திகள் தயங்கிக் கொண்டிருக்க முடியாது. சர்வதேச சட்டம், ஐ.நா. சாசனம் ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்பு இரு தரப்பினருக்கும் உள்ளது.

