மலர் கண்காட்சி: முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்!

263 0

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 42-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்காடு கோடை விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 42-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. தொடக்க விழா நாளை காலை 11 மணிக்கு ஏற்காடு கலையரங்கத்தில் நடக்கிறது.

விழாவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்குகிறார். வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு முன்னிலை வகிக்கிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்காடு கோடை விழாவினை தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

விழாவில் எம்.பி.க்கள் டாக்டர் காமராஜ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், பன்னீர்செல்வம், பி.ஆர். சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் சித்ரா, செம்மலை, வெங்கடாஜலம், சக்திவேல், மனோன்மணி, ராஜா, வெற்றிவேல், மருதமுத்து, சின்னத்தம்பி, ராஜேந்திரன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

தொடக்கத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் அபூர்வவர்மா வரவேற்று பேசுகிறார். முடிவில் சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் நன்றி கூறுகிறார்.

ஏற்காடு கோடை விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகிறார்.

முன்னதாக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சேலம் வருகிறார்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கும் அவர் நாளை காலை கோடை விழா மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

கோடை விழா மலர் கண்காட்சியையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் 1 லட்சம் வண்ண மலர்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. மலர் கோபுரங்கள், விலங்குகள் வடிவிலான மலர் அலங்காரங்கள், காய்கறிகளினால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு வடிவமைப்புகள் உள்ளிட்டவை மலர் கண்காட்சியில் இடம் பெறுகிறது.

ஏற்காடு ரோஜா பூங்காவில் விதவிதமான வண்ணங்களில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

மான் பூங்கா, அண்ணா பூங்கா, மீன் காட்சியகம், லேடிஸ் ஷீட், ஜென்ஸ்ஷீட் சேர்வராயன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் சுலபமாக வந்து செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாகனங்களை நிறுத்தவும் தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியையொட்டி ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜுகள் நிரம்பி வழிகின்றன.

கோடை விழாவையொட்டி சேலத்தில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கோடை விழாவையொட்டி ஏற்காட்டிலும் சேலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

29-ந் தேதி மாலை 4 மணிக்கு ஏற்காடு கலை அரங்கத்தில் கோடை விழா நிறைவு விழா கலெக்டர் சம்பத் தலைமையில் நடைபெறுகிறது.