அக்கரைப்பற்று வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக வேலை நிறுத்த போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு அரச உத்தியோகத்தர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (20) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தொழிற்சங்கமோ அல்லது ஏதேனுமொரு குழுவோ கூறுவதை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு அரச உத்தியோகத்தரையும் பதவி நீக்கம் செய்ய முடியாது. அதற்கென வழிமுறையொன்று காணப்படுகிறது. 2021, 2022, 2023 காலப்பகுதிகளில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் குறித்த மருத்துவ அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவை தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த விசாரணைகளின் போது அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த விசாரணைகளில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் அவர் பதவி நீக்கப்படுவார். இந்நிலையில் கிழக்கு மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டத்தினால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் இதனை அடிப்படையாகக் கொண்டு அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

