அரசாங்கத்தின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது -அஜித் பி பெரேரா

18 0

புதிய கல்வி மறுசீரமைப்பு பிற்போடப்பட்டமைக்கு எதிர்க்கட்சி பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லை. அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி கோயிலில் தேங்காய் உடைத்த காரணத்துக்காகவா ஜனாதிபதி புதிய கல்விக் கொள்கையை 2027 ஆம் ஆண்டு வரை பிற்போட்டார். அரசாங்கத்தின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது என  ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கல்விக் கொள்கை தற்போது பிரதான பேசுப்பொருளாக காணப்படுகிறது. புதியக் கல்விக் கொள்கைக்கு நாங்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கல்விக் கொள்கை தொடர்பில் வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு  அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம் ஆனால் அரசாங்கம் அதனை கவனத்திற் கொள்ளாமல் தன்னிச்சையான முறையில் புதிய கொள்கையை அரசாங்கம் அமுல்படுத்தியது.

புதிய கல்விக் கொள்கையில் குறிப்பாக  ஆறாம் தர பாடத்தொகுதியில் காணப்பட்ட குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி எழுந்த சர்ச்சையால்  தரம்  6 இற்கான புதிய பாடத்திட்டம் அமுல்படுத்தல் 2027 ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டது.இதற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

ஜனாதிபதி கடந்த 13 ஆம் திகதி ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது புதிய பாடத்திட்டத்தை தயாரிப்பதில் காணப்படும் சிக்கல், ஆசிரியர் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப  சிக்கல்கள் ஆகிய காரணிகளால் தரம்  6 இற்கான புதிய பாடத்திட்டத்தை 2027 வரை பிற்போடுவதாக குறிப்பிட்டார்.இதற்கும் எதிர்க்கட்சிகளுக்கும்  எவ்வித தொடர்பும் கிடையாது.

புதிய கல்விக் கொள்கையை கோரி ஒருசில பெற்றோர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்.ஒரு தரப்பினர் கோயிலுக்கு சென்று தேங்காய் உடைத்த காரணத்தினாலா ஜனாதிபதி கல்வி கொள்கையை ஜனாதிபதி ஒத்திவைத்தார். அரசாங்கம் இவ்விடயத்தில் வெட்கப்பட வேண்டும் என்றார்.