வாகன இறக்குமதி தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதா?

18 0

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்களில் ஒரு தொகுதி விடுவிக்கப்பட்டுள்ளன. ஏனைய வாகனங்கள் நீதிமன்ற நடவடிக்கை காரணமாக அவற்றை விடுவிக்கும் முறையை எம்மால் மேற்கொள்ள முடியாமல் இருக்கிறது என நிதி திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எம்,பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ரோஹித அபேகுணவர்தன எம்.பி தனது கேள்வியின்போது,

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் இரண்டு வருடங்களாக ஆயிரம் வாகனங்கள்வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் அதி சொகுசு வாகனங்களாகும்.

சிலவேளை, இந்த வாகன இறக்குமதியாளர் வெளிநாட்டில் இருக்கலாம். அவர் ஒரு இடத்தில் இருந்து இந்த வாகனங்களை பல நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்திருக்கலாம்.

இது எமது நாட்டின் பணம் என்பதால், அந்த வாகனங்களை விடுவிப்பதற்கு முறையொன்றை விரைவாக மேற்கொள்ள வேண்டும் அல்லது தற்போது இது நீதிமன்ற நடவடிக்கை என்பதால், இதனை ஏலத்தில் விட்டு, அந்த பணத்தை நீதிமன்றில் வைப்பிலிட வேண்டும்.

இந்த வாகனங்கள் கடலுக்கு அருக்கில் இருப்பதால் வாகனத்தின் பெறுமதி இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், துறைமுக கட்டணம் அதிகரிக்கப்படும்.

அதேநேரம் கடலுக்கு அருகில் இருப்பதால், இன்னும் சில காலங்களில் இந்த வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால் இதுதொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

அதற்கு பிரதி அமைச்சர் பதிலளிக்கையில், இதுதொடர்பில் வழக்கு விசாரணை இடம்பெறுவதுடன் இந்த பிரச்சினை தொடர்பில் ஒரு தீர்மானத்துக்கு வருமாறு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அதன் பிரகாரம் நிதி அமைச்சினால் சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன் பிரகாரம் சில வாகனங்கள் விடுவித்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.ஏனைய வாகனங்கள் நீதிமன்ற நடவடிக்கை காரணமாக அவற்றை விடுவிக்கும் முறையை எம்மால் மேற்கொள்ள முடியாமல் இருக்கிறது என்றார்.

அதனைத் தொடர்ந்து இடையீட்டு கேள்வி ஒன்றை எழுப்பிய ரோஹித அபேகுணவர்தன  எம்.பி குறிப்பிடுகையில்,

இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கு இறக்குமதியாளர்கள் அதற்குறிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் திகதியில் இருந்து, வாகனத்தை பெற்றுக்கொண்ட திகதிவரையான 90 நாட்களுக்குள் நூற்றுக்கு 3வீத வரி அறவிடப்படுகிறது.

அதன் பின்னர் வாகனத்தை விற்பனை செய்யும்வரை இவ்வாறு 5மாத காலம் ஆகும்போது அது நூற்றுக்கு 9, 10 வீத வரி வரை அதிகரிக்கப்படுகிறது. இது இறுதியாக வாகனத்தை கொள்வனவு செய்யும் நுகர்வோரிடமே அறவிடப்படுகிறது. அதனால் இது தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறதா என கேட்கிறேன் என்றார்.

அதற்கு பிரதி அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

வாகன இறக்குமதியாளர் 3மாதத்துக்குள் வாகனத்தை விற்பனை செய்யாவிட்டால், நூற்றுக்கு 3வீத வரி அறவிட தீர்மானிக்கப்பட்டிருப்பது, எமது நாட்டில் இருந்து பாரியளவில் அந்நிய செலாவணி வெளியில் செல்லாமல் தடுப்பதற்காகும்.

ஏனெனில் இறக்குமதியாளர்கள் பாரியளவில் வாகனங்களை இறக்குமதி செய்து இங்கு களஞ்சியப்படுத்தினால், எமது அந்நிய செலாவணியே அதிகம் வெளியில் செல்கிறது. அதனை கட்டுப்படுத்திக்கொள்வதற்கான உபாய முறையாகவே இந்த நூற்றுக்கு 3வீத வரி அறவிடப்படுகிறது.

அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட வாகனம் சுங்கத்தில் இருந்து விடுவிப்பதற்கு 3 நாட்கள் வரையே செல்லும். பாரியளவில் வானகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் மாத்திரமே இரண்டு வாரங்கள் வரை செல்லும்.

இலங்கைக்கு மீண்டும் வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் இதுவரை 4இலட்சத்தி 51ஆயிரத்தி 770 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த வாகன இறக்குமதி செய்வதன் மூலம் மொத்தமாக 441 பில்லியன் ரூபா வரி உத்தேசிக்கப்பட்டதுடன் 904 பில்லியன் ரூபா ஈட்டிக்கொள்ளப்பட்டடுள்ளது.

அத்துடன் மீண்டும் வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் இதுவரை 22407 முச்சக்கரவண்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று 3இலட்சத்தி 13999 மோட்டார்கள் கைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றார்.