எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்!

32 0

நாடளாவிய ரீதியில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை ஊழியர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு வலுசக்தி அமைச்சு இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியுள்ளதால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பொறியியலாளர் சங்கம், தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகாரிகளின் சங்கம், தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கம், அலுவலக சேவை சங்கம், சுயாதீன அலுவலக ஊழியர் சங்கம், சுதந்திர ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம், கூட்டு மின்சார சங்கம், ஐக்கிய ஊழியர் சங்கம், பதவிநிலை ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் சங்கம், நுகர்வோர் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் சங்கம், களஞ்சியப் பொறுப்பதிகாரிகள் சங்கம், வழங்கல் உத்தியோகத்தர்கள் சங்கம், காசாளர் (பணப் பொறுப்பு) உத்தியோகத்தர்கள் சங்கம், கணக்கு உதவியாளர்கள் சங்கம், வயரிங் செய்பவர்கள் மற்றும் தொழிநுட்ப ஊழியர் சங்கம், உள்ளக தணிக்கை உத்தியோகத்தர்கள் சங்கம், விசாரணை உத்தியோகத்தர்கள் சங்கம், வரைவாளர் சங்கம், சுருக்கெழுத்தாளர் மற்றும் தட்டச்சாளர் சங்கம், கட்டுப்பாட்டு அறை இயக்குநர்கள் சங்கம், அழைப்பு மைய இயக்குநர்கள் சங்கம், பாதுகாப்பு வலுவூட்டல் மன்றம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களே இவ்வாறு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

இது தொடர்பில் கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட இலங்கை மின்சாரசபை சுதந்திர சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த, இலங்கை மின்சாரசபையை முற்றாக நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திடுவதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மின்சாரசபை சட்டத்திலும், உயர்நீதிமன்ற உத்தரவிலும் இந்த நடைமுறைக்கு செல்ல முன்னர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை ஒத்தி வைக்குமாறு வலுசக்தி அமைச்சரையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துகின்றோம். கடந்த வாரம் இது குறித்து 8 காரணிகளை வலியுறுத்தி வலுசக்தி அமைச்சருக்கு எழுத்து மூல கோரிக்கையொன்றை கையளித்திருக்கின்றோம். ஆனால் அமைச்சரிடமிருந்து அதற்கு எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. எம்முடன் கலந்தாலோசிக்காது இவ்வாறு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம் என்றார்.