அமெரிக்காவுக்கான அஞ்சல் நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கான வழிகாட்டல்களை பின்பற்ற அமைச்சரவை அனுமதி

24 0

அமெரிக்காவுக்கான அஞ்சல் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

2025.08.29 அன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இதுவரை நிலவிய 800 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு அதிகமான பெறுமதி கொண்ட பொருட்களுக்கான இறக்குமதி வரி இல்லாமல் குறைந்தபட்ச வரிவிலக்கை நீக்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

இதனால், 100 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்குக் குறைவான பெறுமதி கொண்ட வணிக ரீதியற்ற பரிசுப் பொருட்கள், ஆவணங்கள் மற்றும் விசேட விதிவிலக்குகளுக்குரிய அஞ்சல் பொருட்கள் தவிர்ந்த, அந்நாட்டுக்கு அனுப்பப்படுகின்ற பொருட்கள் அடங்கிய ஏனைய அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களுக்கு அவற்றின் பெறுமதியைக் கருத்தில் கொள்ளாமல் சுங்கவரி செலுத்தப்படல் வேண்டும்.

அத்துடன், குறித்த இறக்குமதி வரியைச் செலுத்தாமல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ள இறக்குமதி வரி விதிக்கப்படும் சர்வதேச அஞ்சல் பொருட்களுக்கு அந்நாட்டு அஞ்சல் நிர்வாகம் பொறுப்புக் கூறாது. அதன் காரணமாக, இலத்திரனியல் வணிகத்தின் (e- Commerce) மூலம் அமெரிக்காவுக்கு அஞ்சல் மூலம் பொருட்களை அனுப்புகின்ற எமது நாட்டு வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்நிலைமைக்குத் தீர்வாக அகில உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தால் விசேட மென்பொருள் செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இது அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பின் உரிமம் பெற்ற நிறுவனமான ZONOS நிறுவனத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, இச்செயன்முறைக்கமைய அகில உலக அஞ்சல் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களைக் கடைப்பிடிப்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.