வீட்டுப் பணிப்பெண்ணை நண்பர்கள் முன்னிலையில் நிர்வாணமாக்கி காணொளி எடுத்த பிரபல வர்த்தகர் கைது

13 0

வீட்டுப் பணிப்பெண்ணை நண்பர்கள் முன்னிலையில் நிர்வாணமாக்கி காணொளி எடுத்து சமூக ஊடகத்தில் பகிர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் அதிகாரிகளினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பிரபல வர்த்தகர் ஒருவர் காலி – ஹிக்கடுவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பிரபல வர்த்தகர் ஒருவர் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பெண் ஒருவர் நபரொருவரால் குழு ஒன்றின் முன்னிலையில் நிர்வாணமாக்கப்படும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகத்தில் பரவியுள்ளது.

இது தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த பெண் பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டுப் பணிப்பெண் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் சந்தேக நபரான பிரபல வர்த்தகர் ஹிக்கடுவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துக்காக சந்தேக நபரான பிரபல வர்த்தகருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இரத்தினபுரி, எஹெலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 44 மற்றும் 55 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.