புதிய கல்வி சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்த்து மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்க தேரர்களிடம் தெரிவித்துள்ளது.
கண்டிக்கு ஞாயிற்றுக்கிழமை (18) சென்றிருந்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற போதே இதனைத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர்,கடந்த ஏப்ரலில் இந்திய பிரமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த போது, இந்தியாவின் பௌத்த சிறப்பு மிக்க வழிபாட்டு சின்னங்களை இலங்கை மக்களும் வழிபட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய அவை எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளன. இது தொடர்பில் மகா நாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
கல்வி சீர்திருத்தங்கள் நீண்ட காலமாக முன்னெடுக்கப்படாமலிருந்தன. எனவே தான் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த எமது அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறிருப்பினும் தரம் 6 பாடநூலில் ஏற்பட்ட ஒரு சிறு தவறால் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் அந்த தவறுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அது தவிர எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போன்று வேறு எந்தவொரு தவறான விடயங்களும் குறித்த பாடநூலில் உள்ளடக்கப்படவில்லை. இதனை நன்கு அறிந்த தரப்பினரால் இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அது மாத்திரமின்றி ஜனாதிபதியிடம் கடிதம் மூலமும் இதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தவறுகள் காணப்படுமாயின் அவற்றை திருத்திக் கொண்டு கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்றார்.

