தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் புலனாய்வாளர்களின் கண்காணிப்பில்!

334 0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை தொடர்ந்து கண்காணிப்பினில் வைக்க இலங்கை அரச கட்டமைப்பு முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வடமராட்சியின் தொண்டைமனாறு பகுதி சனசமூக நிலையம் ஒன்றில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் கலந்து கொள்ளலும் சமகால அரசியல் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையினில் அப்பகுதி மக்களையும் சனசமூக நிலைய உறுப்பினர்களையும் இராணுவ புலனாய்வு பிரிவினர் நேரினில் சென்று அச்சுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகின்றது.

தமது எச்சரிக்கையினையும் மீறி கூட்டத்தினை நடத்தினால் தமக்கு அறிவிக்கவேண்டும் எனவும் அத்துடன் கூட்டத்தினில் உரையாடப்படுவது முழுவதையும் ஒலிப்பதிவு செய்து தர வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

இலங்கையின் வடகிழக்கினில் ஜனநாயகம் திரும்பிவிட்டதாக காண்பித்துக்கொள்ள அரசு ஒருபுறம் சர்வதேச மட்டத்தினில் முற்பட்டுள்ளதுடன் மறுபுறம் தனது இராணுவ இயந்திரத்தை வைத்துக்கொண்டு மக்களை அடிமைகளாக வாழவைக்கவே முற்பட்டுள்ளது.ரணில் தனது பயணமொன்றை வடக்கிற்கு மேற்கொண்டதுடன் வடமராட்சியினில் சுமந்திரனின் அழைப்பினில் சந்திப்புக்களிலும் ஈடுபட்டிருந்தார்.

உண்மையில் எவரின் கருத்துகள் மக்கள் மத்தியில் செல்லக்கூடாது, எவருக்கு தாம் முக்கியத்துவம் கொடுத்து அவரை தமிழ் மக்களின் பிரதிநிதியாக காட்டவேண்டும் என்பதில் சிங்கள அரசாங்கம் மிக தெளிவான வேலைத்திட்டத்தில் நகர்வதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.