முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்ற சிறுமி சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை நுழைவாயிலை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திங்கட்கிழமை (29) அன்று ஈடுபட்டனர்.
அந்த வகையில் சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வைத்தியசாலை பணிப்பாளரை குறித்த இடத்திற்கு வரவழைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் மரணம் தொடர்பில் கேள்வி எழுப்பியதோடு, குறித்த மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.
தொடர்ந்து குறித்த சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறு இதன்போது மக்களால் மகஜர்கள் கையளிக்கப்பட்டன. அந்தவகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினரிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

