பாண்டி மெரினாவில் பாறை இடுக்கில் சிக்கிய உதவி பேராசிரியை மீட்பு!

41 0

மதுரையைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (26). இவர், சென்னையில் தங்கி கல்லூரி ஒன்றில் மனநல உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தன் தோழிகளுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.

நேற்று மாலை வைஷ்ணவி உள்ளிட்டோர் பாண்டி மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்குள்ள பாறைகளின் மீது நின்று செல்போனில் ரீல்ஸ் எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக வைஷ்ணவி கால் இடறி விழுந்து, பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டார்.

இதைக்கண்டு உடன் வந்தவர்கள் கூச்சலிட்டனர். இது குறித்து ஒதியஞ்சாலை போலீஸார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வம்பாக்கீரப் பாளையம் இளைஞர்கள் உதவியுடன் கயிறு கட்டி வைஷ்ணவியை மீட்க முயன்றனர்.

சுமார் அரை டன் எடை கொண்ட பாறை என்பதால் உடனே அவரை மீட்க முடியவில்லை. உடனே பேரிடம் மீட்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டது. அதன்பின்னர் பாறை அப்புறப்படுத்தப்பட்டு உதவி பேராசிரியை வைஷ்ணவி பத்திரமாக மீட்கப்பட்டார்.

இதில் அவருக்கு கால், இடுப்பு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ள புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.