கோவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 3 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை

249 0

கோவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 3 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கேரள பாரம்பரிய உழிச்சல், பிழிச்சல் சிகிச்சை (ஆயுர்வேத மசாஜ்) மேற்கொள்ள உள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) அணி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை கோவை வந்தார். அவரது திடீர் வருகையை தொடர்ந்து நிருபர்கள் பேட்டி காண முயன்றனர். ஆனால் அவர் பேட்டி அளிக்காமல் காரில் ஏறி ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்திய சாலைக்கு சென்றார்.

இந்த வைத்திய சாலை கேரள ஆயுர்வேத முறையில் புத்துணர்வு அளிக்கும் சிகிச்சைகளுக்கு பெயர் பெற்றது ஆகும். இதற்கு முன்பு பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி, கம்யூனிஸ்டு தலைவர் தா.பாண்டியன் மற்றும் அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு 27-ந் தேதி(சனிக்கிழமை) வரை 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கேரள பாரம்பரிய உழிச்சல், பிழிச்சல் சிகிச்சை(ஆயுர்வேத மசாஜ்) மேற்கொள்ள உள்ளார்.

பல்வேறு வகையான இயற்கை மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆயில் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கோவையில் உள்ள அவரது ஆதரவாளர்களுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை.

ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. மட்டும் விமான நிலையத்துக்கு சென்றனர். தன்னை பார்க்க ஆதரவாளர்கள் யாரும் ஆர்ய வைத்திய சாலைக்கு வர வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக, ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு கேரளா மிகவும் பிரசித்தி பெற்றது. சமீப காலமாக கோவையில் உள்ள ஆர்ய வைத்திய சாலைக்கு பிரபலங்கள் சிகிச்சைக்காக அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளனர்.

கோவையை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளிலும் கேரள பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சைகளுக்கென்று ஏராளமான ஆர்ய வைத்திய சாலை மையங்கள் அமைந்து வருகிறது. இந்த மையங்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர்.