வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பான சிறப்பு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம் பெற்றது.
மாவட்டச் செயலார்களுடன் 20.12.2025 அன்று நடைபெற்ற கூட்டத்தின் போது ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் நிலவும் தற்போதைய அனர்த்த நிலைமையை முன்னிட்டு ஒரு சிறப்பு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, குறித்த கூட்டம் நேற்றையதினம் (22.12.2025) பிற்பகல் 3 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகம், பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் , பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பாகவும் அனர்த்த நிவாரணப் பணிகள் மற்றும் வாழ்வாதார உட்கட்டமைப்பு பாதிப்புக்கள் தொடர்பாகவும் குறிப்பாக குளங்கள் வீதிகள் பாலங்களிற்கு ஏற்பட்டுள்ள சேத மதிப்பீடு அதனை மீள புனரமைப்பதற்கு தேவைப்படும் நிதி தொடர்பாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனால் விபரிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட பாதிப்புகளிற்கு நிவாரண மற்றும் புனரமைப்பிற்கு அரசாங்கத்தினால் விசேட கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த நிவாரணப் பணிகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.
இவ்விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கூட்டுறவு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் , மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், , ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வடக்கு மாகாண ஆளுனரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான வேதநாயகன் நிகழ்நிலை மூலம் கலந்து கொண்டார்.

