பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: முதலாளிமார் சம்மேளனம் அறிக்கை

10 0

தித்வா சூறாவளியினால் ஏற்பட்டுள்ள கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள சமூகங்கள் குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகவும் சூழல் உணர்திறன் மிக்க மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய சில பிரதேசங்களிலேயே பெருந்தோட்டத்துறை செயற்பட்டு வருகின்றது. இச்சவாலான காலப்பகுதியில், தோட்டங்களில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கே நாம் முதன்மையான முன்னுரிமையை வழங்குகின்றோம்.

 

சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளைத் தொடர்ந்து, பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) பாதிக்கப்பட்ட தோட்டங்களில் தங்களது அவசரகால மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக செயற்படுத்தின. தோட்ட நிர்வாகக் குழுக்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து, குறிப்பாக மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் உள்ள இடங்களைக் கண்டறிய நெருக்கமாகப் பணியாற்றின. உயிராபத்துக்களைக் குறைப்பதற்கும் உடனடி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அத்தகைய அபாயகரமான இடங்களில் வசிக்கும் குடும்பங்கள் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஏனைய பொது நிலையங்கள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக மாற்றப்பட்டனர்.

 

இதற்கு இணையாக, தோட்டச் செயல்பாடுகள் மற்றும் வாழ்வாதாரச் சூழலை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) மேற்கொண்டன. இதில் சிதைவுகளை அகற்றுதல், வீடுகள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் இயலுமான இடங்களில் அடிப்படை போக்குவரத்துப் பாதைகளை மீண்டும் சீரமைத்தல் ஆகிய பணிகள் உள்ளடங்கியிருந்தன. தரைமட்டத்தில் சுகாதார நிலைகளைக் கண்காணிப்பதற்காக தோட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நலன்புரி அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதோடு, சூறாவளியைத் தொடர்ந்த உடனடி காலப்பகுதியில் தொழிலாளர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கவும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டவும் தோட்ட மட்டத்திலான தகவல் தொடர்பு வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டன.