தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யால் நல்ல நிர்வாகத்தை வழங்க முடியாது” என்று அவரது முன்னாள் மேலாளரும், சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவர் கூறியது: “விஜய்யின் மேலாளராக 28 ஆண்டுகள் பணியாற்றினேன். புலி திரைப்படத்தின்போது வருமானவரி சோதனை மற்றும் உடல்நிலை சரியில்லாத காலங்களில் அவரிடமிருந்து ஆதரவோ, ஒரு தொலைபேசி அழைப்போ கூட எனக்கு வரவில்லை. இதனால், எதிர்காலத்திலும் விஜய் கண்டுகொள்ளமாட்டார் என்று உணர்ந்ததாலேயே திமுகவில் இணைந்தேன்.
விஜய்யால் சரியான நிர்வாகத்தை கொடுக்க முடியாது. இன்னும் அவர் பக்குவப்பட வேண்டும். நேர்மையான மற்றும் திறமையான நிர்வாகிகளை உடன் வைத்துக்கொள்ள வேண்டும். விஜய்யின் இயக்கத்தில் இருக்கும் ஒருசில பொறுப்பாளர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு பதவிகளை வழங்குகிறார்கள். மேலும் விஜய்யை தவறாக வழிநடத்தி வருகிறார்கள்.

