பொங்கலுக்குப் பிறகு 60 நாட்கள் புதுச்சேரி முழுவதும் பாதயாத்திரை: ஜோஸ் சார்லஸ் மார்டின் தகவல்

5 0

“பொங்கலுக்கு பிறகு 60 நாட்கள் புதுச்சேரி முழுவதும் பாதயாத்திரை சென்று மக்களை சந்திக்க உள்ளேன். பாதயாத்திரை தொடங்கும் முன் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்” என்று லட்சிய ஜனநாயக கட்சி (எல்ஜேகே) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.

லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி தொடங்கியுள்ளார். அக்கட்சியின் தலைமை அலுவலகம் துவக்க விழா இன்று நடந்தது. சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து ஜோஸ் சார்லஸ் மார்டின் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக செய்வது சட்ட விரோதமானது. நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும்.

தேவையில்லாத விஷயங்களை செய்யக் கூடாது, திமுகவுக்கு எதிலும் ஒரு தெளிவு இல்லை. இந்த விவகாரத்தில் நீதிபதியை பதவி நீக்கக் கோரும் மனுவில் புதுச்சேரி எம்.பி வைத்திலிங்கம் கையெழுத்திட்டது தவறான விஷயம். காங்கிரஸ் என்னை விமர்சிப்பது நகைச்சுவையாக உள்ளது. மீனவர்களுக்கு ஆதரவாகவும், அவர்கள் வாழ்வாதரத்துக்காகவும் தான் கட்சிக் கொடியை படகில் வெளியிட்டேன்.

நாட்டை ஊழலால் கூறுபோட்டு விற்றது காங்கிரஸ். ஊழலுக்கு முன்னோடியே காங்கிரஸ் கட்சிதான். பொங்கலுக்குப் பிறகு 60 நாட்கள் புதுச்சேரி முழுவதும் பாதயாத்திரை சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். பாதயாத்திரை தொடங்கும் முன் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.