கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 அமைச்சர்களும் அடங்குவர்.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுநலச் சங்கங்கள் – வணிக அமைப்புகள் இளைஞர்கள் விவசாய அமைப்புகள் தொழிலாளர் அமைப்புகள் தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்திட தலைமைக் கழகத்தால் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில், டி.கே.எஸ். இளங்கோவன் (செய்தி தொடர்பு தலைவர்), கோவி செழியன் (வர்த்தகர் அணி துணைத் தலைவர்) , பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளர்), டி.ஆர்.பி. ராஜா, (தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர்), எம்.எம். அப்துல்லா, (அயலக அணிச் செயலாளர்), பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (செய்தித் தொடர்பு செயலாளர், மருத்துவர் எழிலன் நாகநாதன் (மருத்துவ அணிச் செயலாளர்), கார்த்திகேய சிவசேனாபதி (சுற்றுச்சூழல் அணிச் செயலாளர்), ஆ.தமிழரசி ரவிக்குமார் (மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்), ஜி.சந்தானம், இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு), சுரேஷ் சம்பந்தம் (ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

