தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பிரதேசத்தில் பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பொண்டி தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரர் பணிமனை துணைப் பொறுப்பாளர் திரு.குலம் அவர்கள் ஏற்றிவைக்க, மாவீரர் பொதுப்படத்துக்கான ஈகைச்சுடரினை 06.07.2003 அன்று சர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி லெப் கேணல் யாழினியின் சகோதரி அவர்கள் ஏற்றிவைத்து, மலர் வணக்கம் செலுத்தினார்.
தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் திருஉருவப்படத்துக்கான ஈகைச்சுடரினை கப்டன் பாசறைவாணன் மற்றும் லெப். உசாந்தினி/வாசுகி அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினார்.தொடர்ந்து பொது மக்கள் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. பொண்டி தமிழ்ச் சோலை, நுவசி சாம் தமிழ்ச் சோலை நியூலிசுர்மார்ன் தமிழ்ச் சோலை ஆகிய பள்ளி மாணவர்களின் எழுச்சி நடனம், பாடல் மற்றும் கவிதை, பேச்சு என்பவற்றுடன் தமிழர் கலை பண்பாட்டுக் கழகக் கலைஞர்களின் பாடல்களும் இடம்பெற்றன.
பொண்டி நகரபிதா Stephen HERVÉ அவர்களும் தேசத்தின்குரல் நினைவு சுமந்து தனது கருத்துக்களைப் பதிவுசெய்திருந்தார். முக்கியமாக, பொண்டி நகரபிதா Stephen HERVÉ (ஸ்டீபன் ஹெர்வே), தான் இன்றைய நிகழ்வில் பங்கேற்றமை. மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களை நினைவுகூர்ந்தமை தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதெனவும். பொண்டி நகரின் ஆதரவு -தமிழ்மக்களுக்கு எப்போதும் உள்ளது எனவும் தெரிவித்த அவர், சங்கங்கள், குடும்பங்கள்,, குழந்தைகள் என அனைத்தையும் பாராட்டி, உங்கள் செயல்பாடுகள் முக்கியம்ஸவாய்ந்தது என்று கூறினார் .
உறவுகளை வலுப்படுத்துதல் – பொண்டி நகருக்கும் தமிழீழத்திற்கும் (யாழ். நகரம் ) இடையே நல்ல தொடர்புகளை உருவாக்க விரும்புவதாகக் கூறிய அவர், – நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கு நன்றியைத் தெரிவித்து, பாடல்கள், நடனங்கள் எல்லாம் பாராட்டத்தக்கவை எனவும் கூறினார். நினைவுரையினை தேசத்தின் குரல் பாலா அண்ணன் நினைவு சுமந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.
சிறிலங்கா அரசு தமிழர் தேசத்தை அங்கீகரித்தால், இலங்கைத் தீவில் வளம்மிக்க இரண்டு தேசங்கள் வல்லமை கொண்டு உருவாகும்.
அது ஒன்றுக்கொன்று சிநேகத்தையும் வளத்தையும் பகிர்ந்துகொள்ளும் என்ற கருத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அன்றைக்கு முன்வைத்தார்.அதனை சிறிலங்கா அரசு ஏற்றிருந்தால், தமிழர் தேசம்மீது போரையும் ஒடுக்குமுறையையும் நிறுத்தியிருந்தால் இலங்கையின் வரலாறு வேறுவிதமாய் எழுதப்பட்டிருக்கும்.
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் , தமிழீழ தேசத்திற்கும் சிறிலங்காவுக்கும் மாத்திரமல்ல, உலகிற்கும் தேவையான இராஜதந்திரி என்பதுதான் பேருண்மையானது.
அரசியல், வரலாறு, தத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு கோட்பாட்டு வடிவம் கொடுத்த முக்கிய ஆளுமையே தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம். என் அவரது உரையில் தெரிவித்திருந்தார்.நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -ஊடகப்பிரிவு)






























