ரஷ்யா, உக்ரைன் இடையிலான மோதல், 3-ம் உலகப் போராக மாறக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அவர் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளார். உக்ரைன் போரை நிறுத்த 28 அம்ச திட்டத்தை அதிபர் ட்ரம்ப் கடந்த நவம்பர் மாதம் முன்மொழிந்தார்.
உக்ரைனின் கிரிமியா பகுதி கடந்த 2014-ம் ஆண்டில் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது. இதை, ரஷ்ய பகுதியாக உக்ரைன் அரசு அங்கீகரிக்க வேண்டும். ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை ரஷ்யாவிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைக்கப்படாது. ஆனால் உக்ரைனின் பாதுகாப்புக்கு அமெரிக்கா முழு உத்தரவாதம் வழங்கும். அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 100 நாட்களில் உக்ரைனில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 28 அம்ச திட்டத்தை அதிபர் ட்ரம்ப் முன்வைத்துள்ளார்.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வாஷிங்டனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ரஷ்யா, உக்ரைன் போரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள் ஆவர். போரை தடுத்து நிறுத்த வேண்டும். உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்று அதிதீவிரமாக முயற்சி செய்து வருகிறேன்.
ரஷ்யா, உக்ரைன் மோதல் தொடர்ந்து நீடித்தால் 3-ம் உலகப் போர் ஏற்படக்கூடும். இதை தடுக்க தீவிர முயற்சி செய்கிறேன். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் ட்ரம்ப் முயற்சி செய்து வருகிறார். இதுதொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் வியாழக்கிழமை அவர் கலந்தாலோசித்தார். அதிபர் ட்ரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், ரஷ்யா, உக்ரைனுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த வார இறுதியில் முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ஆனால் ரஷ்யா, உக்ரைனின் செயல்பாடுகள் குறித்து அதிபர் ட்ரம்ப் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். எனவே அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்க பிரதி நிதி பங்கேற்பதா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருதரப்பு பேச்சு
வார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் விரும்புகிறார். அப்போதுதான் சமரச முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபடும். இவ்வாறு கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

