மியான்மர் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் பொது மருத்துவமனை தரைமட்டமானது. இதில் 34 நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டின் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக அராக்கன் படை, எம்என்டிஏஏ, டிஎன்எல்ஏ ஆகிய 3 கிளர்ச்சிக் குழுக்கள் ஓரணியாக ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றன.
தற்போதைய சூழலில் மியான்மர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் 21 சதவீத பகுதிகளும் கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் 79 சதவீத பகுதிகளும் உள்ளன.
இந்த சூழலில் அராக்கன் படை கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணம், மிராக்-யூ நகரில் உள்ள பொது மருத்துவமனையை குறிவைத்து மியான்மர் ராணுவத்தின் போர் விமானம் புதன்கிழமை இரவு குண்டுகளை வீசியது. இதில் மருத்துவமனை தரைமட்டமானது. 34 நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து மியான்மர் அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “இந்த நகரை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர மியான்மர் ராணுவம் அதிதீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மியான்மர் ராணுவ வீரர்களால் தரைவழியாக முன்னேற முடியவில்லை. இதன்காரணமாக மிராக் யூ நகர் மீது அடிக்கடி வான்வழி தாக்குதல் நடத்தப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.

